சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக, அபிநயா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும், தேர்தலில் இங்கு எந்தக் கட்சி வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என்பது பற்றியும் ஜூலை 3,4,5 ஆகிய தேதிகளில், இத்தொகுதிக்குட்பட்ட 90 இடங்களில், 1,360 வாக்காளர்களிடம் பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டுள்ளார். அங்கு சேகரித்த தரவுகள் தொடர்பான விவரங்களை இன்று (திங்கட்கிழமை) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.
இந்த கருத்துக்கணிப்பில்,"தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தின் குவியமாகத் திகழும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களத்தில், மாநில அளவில் பிரதான கட்சிகளில் ஒன்றாகிய அஇஅதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. இதுவரை இடைத்தேர்தல் முறையை விமர்சித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ளது. கள்ளச் சாராய மரணங்கள் உள்ளிட்ட சங்கடங்களுக்கு இடையே தொகுதியைத் தக்கவைக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் போரில் குதித்துள்ளது.
விக்கிரவாண்டி வாக்காளரிடையே கட்சிகளுக்கு வெளிப்படும் ஆதரவு: விக்கிரவாண்டி தொகுதி மக்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், திமுக 56.6 சதவிகிதமும், பாமகவுக்கு 37.5 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சிக்கு 4.0 சதவிகிதமும், பிற வேட்பாளர்கள் 0.4 சதவிகிதம் மற்றும் முடிவு செய்யாதோர் 1.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதிமுக வாக்கு பிரியும் விதம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-விற்கு வாக்களித்ததாகக்
கூறுவோரில் (மொத்த சாம்பிளில் 24.6 சதவிகிதம் ) பாதிக்கும் மேற்பட்டோர் பாமக-விற்கு வாக்களிக்கின்றனர்.
அந்த வகையில், பாமகவிற்கு 52.2 சதவிகிதமும், திமுகவுக்கு 37.3 சதவிகிதம், நாம் தமிழர் கட்சி 6.0, பிற வேட்பாளர்கள் 1.5 சதவிகிதம் மற்றும் முடிவுசெய்யாதோர் 3.0 சதவிகிதமாகும்.
வகுப்பு ரீதியாக: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு மிகக் கணிசமாக பாமக-விற்கும், பட்டியலின
மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு பெரும்பாலும் திமுக-விற்கும் செல்கின்றன.
வகுப்பு | பாமக வாக்கு சதவிகிதம் | திமுக சதவிகிதம் | நாதக சதவிகிதம் |
பட்டியலினத்தவர் | 10.0 | 76.7 | 10 |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் | 54.3 | 42.1 | 1.8 |
பிற்படுத்தப்பட்டோர் | 15.2 | 80.4 | 4.4 |
பாலின ரீதியாக: ஆண்களும் (மொத்த சாம்பிளில் 61.4சதவிகிதம் ) பெண்களும் (மொத்த சாம்பிளில் 38.2சதவிகிதம் ) வாக்களிக்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு வெளிப்படுகிறது.
கட்சிகள் | ஆண்கள் | பெண்கள் |
பாமக | 40.1 சதவீதம் | 33.7 சதவீதம் |
திமுக | 53.3 | 61.5 |
நாதக | 4.2 | 3.8 |
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்றும் முதல்வர் குறித்து விக்கிரவாண்டி வாக்காளரின் அனுமானம் (முதல் ஐந்து இடங்கள்)
ஆட்சியமைக்கும் கட்சி குறித்த அனுமானம்:
கட்சிகள் | வாக்கு சதவிகிதம் |
திமுக | 42.6 |
பாட்டாளி மக்கள் கட்சி | 20.2 |
அஇஅதிமுக | 19.5 |
தமிழக வெற்றிக் கழகம் | 10.7 |
நாம் தமிழர் கட்சி | 4.4 |
அடுத்த முதல்வர் குறித்த ஊகம்
கட்சி தலைவர்கள் | வாக்கு சதவிகிதம் |
மு.க. ஸ்டாலின் | 41.5 |
அன்புமணி | 20.6 |
எடப்பாடி பழனிச்சாமி | 19.5 |
விஜய் | 11.8 |
சீமான் | 4.0 |
மேற்கண்ட இரு அட்டவணைகளின்படி, விக்கிரவாண்டியைப் பொருத்த அளவில் அதிமுக-வையும்,
எடப்பாடி பழனிச்சாமியையும் மூன்றாமிடத்திற்குத் தள்ளி, பாமக-வும் அன்புமணியும் இரண்டாம்
இடம்பெறுகின்றனர். அவ்வாறே, நாதக-வையும், சீமானையும் விட அதிகமான ஆதரவைத் தவெக-
வும், விஜயும் பெறுகின்றனர்" என்று தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளதாக பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் கூறினார்.
தமிழக அளவிலான தரவு: இதேபோன்று, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஏப்ரல் 2024 இல் மக்கள் ஆய்வின் கருத்துக் கணிப்புகள் குறித்து பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் கூறியதாவது:
வாக்குக்குப் பணம்: "வாக்குக்குப் பணம் வாங்குவது குறித்து வாக்காளரிடையே பரபரப்பும் குதூகலமும் நிலவுகிறது. பணம், பரிசு தரும் எல்லா வேட்பாளரிடமும் வாங்கிக்கொள்வேன் என்று 85.5 சதவிகிதமும்,
ஏதேனும் ஒரு வேட்பாளரிடமிருந்து மட்டும் பணம் பெறுவோர் 13.2 சதவிகிதமும் உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன
பணம் வாங்கிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை என்ற மனப்போக்கு அழுத்தமாக வெளிப்படுகிறது. வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை என்று 72.4 சதவிகிதமும், பணம் கொடுத்த அனைத்து வேட்பாளருக்கும் குடும்ப வாக்குகளை பகிர்ந்து வழங்குவோர் 21.2 சதவிகிதமும், ஒரு வேட்பாளரிடம் மட்டும் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு வாக்களிப்போர் 5.6 சதவிகிதமும் உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஒப்பீட்டளவில், ஈரோடு - கிழக்கு இடைத்தேர்தல் போல மிகையான ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லை என்றாலும் பண விநியோகத்தில் ஈரோட்டை விஞ்சி நிற்கிறது விக்கிரவாண்டி. சாதி, மதம், சினிமா, ஊடகம், கட்சி உள்ளிட்ட அனைத்துக் காரணிகளையும் உள்வாங்கி இயக்கும் மைய-அச்சுக் காரணியாக (supervening factor) பணம் திகழ்கிறது. அதாவது, வெற்றிக்குப் பணம் மட்டுமே போதாது. ஆனால் பணமின்றி எக்காரணியும் வேலைசெய்யாது என்பது நிதர்சனம் மட்டுமல்ல, புள்ளியியல் ரீதியான உண்மையாகும்.
எண்ணியல் மற்றும் பண்பியல் கூறுகளை ஒன்றிணைத்து (triangulation) காணும்போது, திமுக - பாமக இவற்றுக்கு இடையேயான ஆதரவு இடைவெளி குறுகும் சாத்தியங்களே அதிகம் என்றாலும், திமுக வேட்பாளரின் வெற்றி நிச்சயம் எனக் கணிப்பில் தெரிய வருகிறது” என்று டாக்டர் ச.ராஜநாயகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இறுதிக்கட்ட பரப்புரையில் உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - VIKRAVANDI BY ELECTION