விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனைதொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதனைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை13ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதனைதொடர்ந்து திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பணபலம், அதிகார பலம் ஆகியவற்றால் சுதந்திரமாக நடைபெறாது எனக்கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக அமைச்சர்கள் எ.வ வேலு, உதயநிதி ஸ்டாலின், செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், கே.என்.நேரு உள்ளிட்ட 30 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்டோரும், நாதக சார்பில் போட்டியிடும் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இன்று (ஜுலை 8) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. அதன்பிறகு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாதுஎனவும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரசாரம் மேற்கொண்ட வெளி நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எவருக்கும் தேர்தல் நடத்தை விதிகளின்படி தொகுதியில் தங்கிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விதிகளை மீறி தங்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் வாக்களிக்க மொத்தம் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தொகுதியை தக்க வைக்க திமுகவும், ஆளுங்கட்சியின் வெற்றியை தடுத்து சரித்திரம் படைப்போம் என பாமகவும் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு கொடுக்க சேலைகள் பதுக்கல்; திமுக நிர்வாகி மீது பாமகவினர் பகிரங்க குற்றச்சாட்டு! - vikravandi by election