தூத்துக்குடி: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்ரமராஜா திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் ஒருபகுதியாக திருச்செந்தூரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரமராஜா, "தமிழக முதலமைச்சர் நகராட்சியில் உள்ள வியாபாரிகளின் கடைகளின் வாடகையை புதுப்பித்தல் காலமாக இருந்த 9 ஆண்டை 12 ஆண்டாகவும், வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இழப்பீடு தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும் உயர்த்தியுள்ளார். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை இருந்த லைசன்ஸ் 3 ஆண்டிற்கு ஒரு முறை என்று மாற்றிக் கொடுத்துள்ளார். இதனை அனைத்து வணிகர்கள் சார்பாக மனதார பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் வர்த்தகம் மூலம் வணிகர்கள் பாதிக்கப்படுவதை நிறுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
மேலும், மத்திய அரசின் புதிய பட்ஜெட்டில் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சத்தை ரூ.20 லட்சம் வரை உயர்த்தியுள்ளதை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளோம். இந்த கடன் திட்டத்தை வங்கி மேலாளர்கள் வணிகர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். அதனை வங்கி மேலாளர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அவர்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் 6 சதவீதம் குறைந்த வட்டியில் கடன் வழங்கியுள்ளார். திருச்செந்தூர் மார்க்கெட் பிரச்னை குறித்து முறையாக ஆய்வு செய்ய எங்கள் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் தீர்வு காணப்படும்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு தகுந்த இடத்தில் வணிக கடைகள் அமைத்து தர வேண்டுமென்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகனிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்திய விமானப் படையில் பணி வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?