விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்திருந்த பிரமாண்டமான மாநாட்டு திடலில் விஜய் தனது வழக்கமான பாணியிலும், இடையிடையே உணர்ச்சி பெருக்குடனும் பேசினார்.
தவெகவின் கொள்கைகள், தங்களின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிரிகள் யார்?, 2026 சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து அவர் உரையாற்றினார். அவரது பேச்சில் குறிப்பாக, தவெக தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
இதுகுறித்து அவர் பேசும்போது, " நாம் மட்டும் நன்றாக இருக்கணும் என்று எண்ணுவது சுயநலமில்லையா? நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம்னு யோசிச்சப்போ விடையாக கிடைத்தது தான் அரசியல். எனது இந்த முடிவை சிலர் விமர்சித்தார்கள், அரசியல் உங்களுக்கு சரி வருமா என்று சந்தேகத்துடன் கேட்டார்கள்.
இதையும் படிங்க:ஒன்றியம், மாநிலம் இரண்டையும் வெளுத்த விஜய்:"டீசன்ட்டா அட்டாக்! ஆனா ரொம்ப டீப் ஆன அட்டாக்!"
ஆனால், சில விஷயங்களில் பின்விளைவுகளை யோசிக்காமல் இறங்கி அடிக்கணும் அப்போதுதான் சாதிக்க முடியும் என்று முடிவெடுத்த பிறகுதான் அரசியலில் தீவிரமாக இறங்குவது என்று முடிவெடுத்தேன். ஆனால், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்பதிலும் தீர்மானமாக உள்ளோம். A Team, B Team எனக்கூறி இப்படையை யாரும் வீழ்த்திட முடியாது.
இதோ இப்படி என்றால் 2026 வந்துவிடும்.. அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் என்ற போருக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அல்லவா? அந்தப் போரில் மக்கள் தவெகவுக்கு ஆதரவாக அழுத்தும் பொத்தான்கள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக வெடிக்கும்.
அந்தப் போரில் நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு 100 சதவீதம் உள்ளது. தவெகவின் செயல்பாட்டை நம்பி யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அதுபோன்ற அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருவோரை அரவணைக்க வேண்டும். நம்மோடு களம்காண வருவோருக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்" என்று விஜய் பேசினார்.