தருமபுரி: தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கட்சி தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி பேசு பொருளாக இருந்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம் கடந்த ஒரு ஆண்டாக பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய நூலகம் அமைத்தது. சென்னை மற்றும் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பெய்த மழையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதைபோல கடந்த 2023ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசு தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் என பல்வேறு வகைகளில் நலத்திட்ட உதவிகளை செய்தார். இந்நிலையில் நடிகர் விஜய் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எழுந்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கட்சி தொடங்கும் பணிகளை மேற்கொள்ள டெல்லிக்கு ஒரு குழு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து தனது ஆதரவை ஏதாவது ஒரு கூட்டணிக்கு தெரிவித்துவிட்டு 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முழுமூச்சாக களமிறங்க இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்காத நிலையில் தருமபுரியில் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் ’தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயரிட்டு அரசனுக்கு இந்த அரியாசனம் எனவும் முதலமைச்சர் என விஜய் புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் தமிழக முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் பொருளாளர் என கட்சியின் பெயரை குறிப்பிட்டு தான் வகிக்கும் பொறுப்பையும் குறிப்பிட்டு வருகின்றனர். நடிகர் விஜய் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் அவரது ரசிகர்கள் முன்னேற்பாடாக அறிவிக்கப்படாத கட்சியன் ஒரு பெயரை குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர். ஏற்கனவே ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்… அண்ணாமலை நடைபயணத்தின் போது விபரீதம்!