சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்.16ஆம் தேதி தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பக லெட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “காவிரி விவகாரம் தொடர்பாக உயிரிழந்த விக்னேஷின் நினைவு நாளை, காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
விக்னேஷ்-க்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கிச் செலவு செய்தவர் சீமான். அதில், ஒரு ரூபாயைக் கூட குடும்பத்தினருக்கு தரவில்லை. எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், தனது (செண்பக லட்சுமி) கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும், நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
கண் அறுவை சிகிச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை, நாங்கள் அவர்களுடன் செல்லவில்லை. என் சித்தி தான் என் கண் அறுவை சிகிச்சையைப் பார்த்தார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள்.
அவர்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும், தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடலூர் சுத்த சன்மார்க்க அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! - Vadalur Vallalar Sabai Case