கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகமாக லஞ்ச வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (வியாழக்கிழமை) மாலை தொடங்கி, வெள்ளிக்கிழமை மதியம் வரை தொடர்ந்து சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனையில், சார்பதிவாளர் சாந்தி மற்றும் அவரது உறவினர்களின் வங்கிக் கணக்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூபாய் 25 லட்சம் 33 ஆயிரத்து 880, லஞ்சப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம், பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டு, தவறான முறையில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சார்பதிவாளர் சாந்தி, அலுவலக ஊழியர் பிரவீன் குமார் மற்றும் கார் ஓட்டுநர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இடைத் தரகராக செயல்பட்ட நவீன்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தில் பரவலாக லஞ்சம் பெறும் செயல் நடைபெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் பத்திரப் பதிவு தொடர்பான பல்வேறு பணிகளை செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை லஞ்சம் பெறப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு லஞ்சமாக பெறப்பட்ட பணம் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு, சார்பதிவாளர் சாந்தி மற்றும் அவரது உறவினர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, பின்னர் பல்வேறு முறைகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் கருத்து வேறுபாடு இருந்தது! ஆனால் சமாதானம் ஆகிவிட்டோம்..”- பால் கனகராஜ் பேட்டி