ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழை பெய்யாத காரணத்தால், கடும் வறட்சி நிலவியது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி குடியிருப்புப் பகுதிக்கு நுழையும் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், தாளவாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை ஒன்று, மாமரத்தின் மீது ஏறி, தும்பிக்கையால் மாங்காய் பறிக்க முயன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. ஆகையால், பயிர்களின் பாதுகாப்பிற்காக விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள தொட்டத்தாய் அம்மன் கோயில் அருகே இருந்த நுழைந்துள்ளது. இதைக் கண்ட விவசாயிகள் அச்சமடைந்து இந்த யானையை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது, அந்த காட்டு யானை தோட்டத்திலிருந்த மாமரத்தின் மீது ஏறி தனது தும்பிக்கையால் மாங்காய்களை பறிக்க முயன்றுள்ளது.
அதனைக் கண்ட விவசாயிகள் டார்ச் லைட் அடித்தும், சப்தம் போட்டும் அந்த காட்டு யானையை விரட்டினர். அப்போது அந்த காட்டு யானை மாமரத்திலிருந்து கீழே விலகி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. முன்னதாக, யானை மரத்தில் ஏறி மாம்பழம் பழம் பறிக்க முயன்றதை அங்கிருந்த விவசாயிகள் கண்டு ரசித்தனர்.
வறட்சியின் போது மட்டும் ஊருக்குள் புகும் யானைகள், கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையிலும் ஊருக்குள் எப்படி வருகின்றன என கிராம மக்கள் வனத்துறையினரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, தற்போது மாம்பழம் சீசன் என்பதால், மாம்பழம் பழுத்த வாசனையை நுகர்ந்து கொண்டு யானை தோட்டத்திற்கு வந்திருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, யானையை விரட்டும் போது ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்னதான் காட்டு யானையைக் கண்டால் பயமாக இருந்தாலும், யானை செய்யும் சின்னசின்ன செயல்கள் அவ்வப்போது ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது.