வேலூர்: மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று (மார்ச் 9) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, காட்பாடி, வேலப்பாடி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் பின்னால், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாகச் சென்றனர்.
ஊர்வலத்தில் மேள தாளம் முழங்க இளைஞர்களும், சிறுவர்களும் உடன் ஆடிப்பாடிச் சென்றனர். ஆண்கள் பலர் பெண்கள் போன்று வேடம் அணிந்தும், சிலர் எலும்புத் துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்தபடியும் ஊர்வலத்தில் சென்றனர்.
மயான கொள்ளை ஊர்வலம், வேலூர் ராஜா திரையரங்கம் தொடங்கி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அதேபோல், காட்பாடியில் தொடங்கி, விருதம்பட்டு வழியாக புதிய பேருந்து நிலையத்தில் வந்தடைந்தது. வீதிகள் வழியாகச் சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி, தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊர்வலம் வந்தனர். அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மயானத்தில் உள்ள தங்களது முன்னோர் சமாதிகளுக்குச் சென்றும் பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினர்.
அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயான கொள்ளை திருவிழாவையொட்டி, நகரின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் ட்ரோன் மூலமாக தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் நகரப் பகுதியில் மட்டும் 500 காவலர்களும், மாவட்டம் முழுவதும் 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி வேலூர் கிரீன் சர்க்கிள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: "குடிகார பொறுக்கிகள்" - மஞ்சும்மல் மட்டுமல்ல மலையாள கரையோரத்தையே விமர்சிக்கும் ஜெயமோகன்