வேலூர்: வேலூர் மாவட்டம், விருதம்பட்டு அடுத்த கழிஞ்சூரில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட மயூரா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் தங்களது சொந்த செலவில் ரோடு போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை அறிய ஈடிவி பாரத் முயற்சித்தது. அதன் பயனாக, இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அந்தப் பகுதியின் அடிப்படை வசதியின்மை குறித்தும், வீதியில் அமைந்திருக்கும் மின் கம்பம் குறித்தும் பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் உயிரை நாங்கள் காக்க வேண்டும் என்ற சூழல் இந்த நகர் வாசிகள் இணைந்து ரோடு போடும் பணியைத் தொடங்கினோம் என்றனர்.
மேலும், இது குறித்து பேசிய அப்பகுதியில் வசிக்கும் நித்யா, “இந்த பகுதியின் சாய்பாபா தெருவில் உள்ள 20 அடி சாலையின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அப்புறப்படுத்தி சாலையோரம் வைத்து தரக் கோரி மின் வாரியத்திற்கும், மாநகராட்சிக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. மேலும் இந்த பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி மற்றும் பாதாளச் சாக்கடை வசதி கூட இல்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குடியிருக்கும் சுரேஷ் கூறுகையில், “இந்த பகுதியின் சாலையில் நடுவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதுகுறித்து 10 ஆண்டுகளாக நாங்கள் புகார் எழுப்பி வருகிறோம். அதனால் தற்போது நாங்களே 1.5 லட்சம் ரூபாய் செலவில் சாலையை விரிவுபடுத்தியுள்ளோம்.
மேற்படி நடவடிக்கையாக, மாநகராட்சி தார்சாலை வசதி மற்றும் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவை அனைத்து வசதியையும் விட முதலில் மாநகராட்சி அந்த மின் கம்பத்தை அகற்றினால் போதும், ஏனென்றால் இதனால் பலர் சாலை விபத்துக்குள்ளாகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய பாலா, “மாநகராட்சியிடம் புகார்களை அளித்து நடவடிக்கை குறித்து கேட்டால், அவர்கள் எங்கள் நகர் மாநகராட்சி பட்டியலிலே இல்லை எனக் கூறுகின்றனர். தற்போது எங்கள் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது இந்த மின் கம்பம்தான். 20 அடி சாலையில் 10 அடிக்கு நடுவே இந்த மின்கம்பம் இருக்கும் நிலையில், வாகனங்கள் சென்று வர முடியவில்லை.
எனவே தான் இந்த பள்ளங்களை அகற்றி நாங்கள் சொந்த செலவில் மண்சாலை போட்டுள்ளோம். இந்த மின் கம்பத்தால் ஆம்புலன்ஸ்கள் கூட உள்ளே வந்து திரும்பிச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், இரவில் இந்த வழியாக வருபவர்கள் மின் கம்பம் சாலை இடையில் இருப்பதைப் பார்க்காமல் விபத்து ஏற்படுகிறது. அதேபோல் லாரி போன்ற கனரக வாகனங்கள் நிலை தடுமாறி மின்கம்பம் மீது விட்டுவிட்டால் பின் எங்கள் நகரே மின் தாக்கி இழப்புக்குள்ளாக வேண்டும்.
எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும் மாநகராட்சிக்குத்தான் வரி செலுத்துகிறோம், எனவே, இதுகுறித்து எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட வேறு வழி தெரியவில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சமயபுரம் கோயிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!