வேலூர்: அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.18) நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கினார். மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோருடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்.18) நடைபெற்றது.
சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆகிய பிரிவினர்களுக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
அதில் கூறியதாவது; அச்சகங்கள், அனுமதியைப் பெற்ற பின் தான் தேர்தல் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை அச்சிட்டுத் தர வேண்டும். அதில் எவ்வளவு அச்சிடப்படுகிறது என்பதை நோட்டீசில் பிரிண்டிங்க் செய்ய வேண்டும். வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையோ, போஸ்டர்களையோ அச்சிடக் கூடாது. மேலும் பிரிண்டிங் செய்தவரின் பெயர் முகவரியைப் பெற்று வைக்க வேண்டும். தேர்தல் அதிகாரியிடம் விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.
இதே போல் தேர்தல் காலங்களில், அரசியல் கட்சியினர் மண்டபங்களில் கூட்டங்கள் நடத்தத் தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெற்று, அந்த கடிதத்தைக் கொடுத்த பின் மண்டப அனுமதியை வழங்க வேண்டும். திருமண மண்டபங்களில் உணவுகளை வழங்கக் கூடாது. அதே போல் பரிசுப் பொருட்களை மண்டபங்களில் சேமித்து வைத்து, அதனைப் பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. வெளிமாநில மற்றும் வெளியூர் மக்கள் கும்பல் கும்பலாகத் திருமண மண்டபங்களில் தங்க வைக்கக் கூடாது.
இதே போன்று தங்கும் விடுதிகளில், வெளிமாநில ஆட்கள் அல்லது வெளி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தங்கும் போது, அவர்களின் முழு விவரங்களை காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். லாட்ஜ்களில் பணப்பரிமாற்றம் நடக்காமல் தடுக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் தேர்தல் அதிகாரியின் அனுமதியின்றி எக்காரணம் கொண்டும் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது. தேர்தல் விதிகளுக்குட்பட்டு விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், திரளான விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.