திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு, ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
அதன்படி கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.
இதனை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் ஷியாமல் ராவ் (IAS) தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை பட்டாச்சார்யார் சுந்தர் பட்டர் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக நம் பெருமாளுக்கான வஸ்திரங்கள் கோயில் யானைகள் ஆண்டாள் மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர்.
பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது குறித்து அர்ச்சகர் சுந்தர் பட்டர் கூறுகையில்,"ஶ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய தலங்கள் எல்லா நாளும் கொண்டாடப்படக் கூடிய திவ்ய தேசங்கள் ஆகும். அதில் நம்பெருமாள் சில காலம் ஶ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதி சென்றார்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்: வெற்றி உங்கள் வசப்படும்.. எந்த ராசிக்காரருக்குத் தெரியுமா?
இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் செய்து வருகின்றனர். கைசிக ஏகாதசி மற்றும் வருகிற வைகுண்ட ஏகாதசியும் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது. இந்த கோயிலில் ஶ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வஸ்திரங்கள் மரியாதை அளிக்கப்பட்டது" என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.