கரூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம், பாமக கரூர் மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில், கோவை சாலையில் உள்ள என்.டி.எஸ் பேலஸ் ஹோட்டல் நேற்று நடைபெற்றது. அதில், பாமக நிர்வாகிகளை மறு கட்டமைப்பு செய்து, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது என பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி, "தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்காக தொகுதி தலைவர், தொகுதி செயலாளர், மகளிர் அணி தலைவர், மகளிர் அணி செயலாளர் என்ற அடிப்படையிலே நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான இந்த விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதனை ஆய்வு செய்து, தலைமையின் பரிசீலனைக்காக அனுப்பி, நிர்வாகிகளை தேர்வு செய்ய இருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் பாமக 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் கொண்டு வருவதற்காக இந்த கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றோம். மேலும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் முடிவு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அடுத்த கட்ட போராட்டம் குறித்த கேள்விக்கு, வன்னியர் சமூக இட ஒதுக்கீடு சம்பந்தமாக அறிவிப்பை தலைமை அறிவித்தவுடன் அதற்கான பணிகளை செய்வோம். மேலும், பாமக 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தலித் ஒருவரை தமிழகத்தின் முதல்வராக முன்னிறுத்துவோம் என்று கூறியிருப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் பாமக தலைமையிலான ஆட்சி அமைந்தால், நாங்கள் ஒரு தலித் நபரை முதலமைச்சர் ஆக்குவோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றார்.
ஏற்கனவே, மத்தியில் கூட்டணி அமைத்து கிடைத்த வெற்றியில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை மத்திய அமைச்சராக்கி இருக்கின்றோம். அந்த அடிப்படையில், எங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒற்றுமையாக ஆதரவு கொடுத்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல் படி, ஒரு தலித் நபரை முதலமைச்சராக நாங்கள் பாடுவோம்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்