கோயம்புத்தூர்: பாஜக அகில இந்திய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த 2023 ஆகஸ்ட் 12ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
அதில், நீதிபதி சந்துரு 650 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜூன் 18ஆம் தேதி வழங்கியுள்ளார். அந்த அறிக்கையில், "பள்ளி பெயரில் ஜாதி அடையாளம் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு ஜாதி பெயர் இருந்தால் நீக்க வேண்டும், ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.
மாணவர்கள் தங் கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதி அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வர்ணம் தீட்டக் கூடாது" என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே மதம், ஜாதி, இனம், மொழி என்று எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என்பதில் யாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான், பள்ளிகளில் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சந்துருவின் பல்வேறு பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. அதை அரசு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் நெற்றியில் திலகம் அணிந்து வர அனுமதிக்கக் கூடாது என்ற பரிந்துரை தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது.
தங்களது பெண் குழந்தைகள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருப்பதை இந்துக்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது, மாணவர்கள் நெற்றியில் திலகம் அணியக் கூடாது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது. நெற்றியில் திலகம் அணிவது எந்த ஜாதி, இன அடையாளமும் அல்ல.
கர்நாடகாவில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைத் தவிர வேறு எந்த ஆடையும் அணிந்து வரக்கூடாது என்று அப்போதிருந்த பாஜக அரசு அறிவுறுத்தியது. அதற்கு, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 'போலி மதச்சார்பின்மை' பேசும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிறுபான்மை முஸ்லிம் மாணவிகள் 'ஹிஜாப்' அணிய பாஜக அரசு தடை விதிப்பதாக பிரச்சாரம் செய்தனர். பாஜக அரசுக்கு எதிராக மத அடிப்படைவாதிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அன்று, முஸ்லிம் மத அடையாளமான ஹிஜாப்புக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று மாணவர்கள் திலகம் அணிந்து வரக்கூடாது என்கின்றனர். "நாம் திலகம் அணிந்து சென்றால் மற்றவர்களைப் பாதிக்குமோ" என்பது போன்ற மனநிலையை இந்து மாணவர்களிடம் விதைக்க முயற்சிக்கும் கொடிய உள்நோக்கம் கொண்டது இந்த பரிந்துரை. எனவே, மாணவர்கள் நெற்றியில் திலகம் அணிந்து வரக்கூடாது என்று பரிந்துரையை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்.
அதுபோல, ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும் என்ற பரிந்துரை நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஒரு தொகுதியில், எந்த ஜாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிகள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக கட்சித் தலைமையை ஒரு குடும்பத்தின் பிடியிலேயே வைத்திருப்பவர்கள்.
சிறுபான்மையினர்வாக்குகள் மொத்தமாக கிடைக்கிறது என்பதற்காக இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட மறுப்பவர்கள், ஒருவரின் சமூக நீதி நிலைப்பாட்டை எப்படி மதிப்பிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். பள்ளிகளின் பெயர்களில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்றால், பள்ளிகளின் பெயர்களில் மத அடையாளங்களும் இருக்கக் கூடாது.
பள்ளிகளின் பெயர்களில் இருந்து ஜாதி அடையாளங்கள் நீக்கப்படும் போது, மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும். அதுவே, உண்மையான சமூக நீதி. இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரையை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். அதற்கு மாறாக பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகம் இட தமிழ்நாடு அரசு தடை விதித்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவின் நீட் போராட்டம் வெறும் கண் துடைப்பு - எடப்பாடி பழனிசாமி சாடல்!