கோயம்புத்தூர்: கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் கோவை வருகை மக்கள் மற்றும் பாஜகவினரால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை (மார்ச் 18) மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் துவங்கி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேரணி நிறைவடையும். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு தர இருக்கின்றனர்.
கோவை மட்டுமின்றி, அருகில் உள்ள சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், மோடியின் வருகையின் போது பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி அமைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று கொள்ளலாம். இதில் பொது மக்கள் பங்கேற்க எந்த கட்டுப்பாடும் கிடையாது. குறிப்பாக இதற்கென தனியாக பாஸ் கிடையாது. இருப்பினும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு அந்தந்த பகுதிகளுக்கு வந்து சேர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான சிறப்பு திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியை 28 பைசா என தரக்குறைவாக அழைப்போம் என்று கூறுகின்றனர். ஜாபர் சாதிக் கூட தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் (Drug) உதயநிதி என அழைக்கலாமா? மேலும், பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "3 ஆண்டு கால திமுகவின் மோசமான ஆட்சியை மக்கள் தாங்க முடியாத சுமையில் தவித்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். இந்தியா கூட்டணி (INDIA Alliance) சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. ஆனால், பிரதமர் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, 19ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை இரண்டு மூன்று நாட்களில் நிறைவு பெறும். பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கி வருகிறோம். எங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம்" என பேசினார்.
மேலும், ஒரே கட்டமாக ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை என்ற கமல்ஹாசனின் கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அவருடைய புரிதல் அரைகுறையானது. நடைமுறை எதார்த்தம் புரியாதவர். மக்களை சந்திக்காமல், எந்த பிச்சனையும் வேண்டாம் எனக் கூறி தனக்கு ராஜ்ய சபா சீட் போதும் என்று வாங்கியுள்ளார்" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு