திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருப்பவர் ஆரோக்கியதாஸ் (30). சென்னை அடுத்த அரக்கோணத்தை சேர்ந்த இவர் கடந்த ஓராண்டாக வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆலய திருவிழா நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இங்கு ஓராண்டாக பணிபுரிந்த ஆரோக்யதாஸ் சென்னை பொன்னேரி என்ற இடத்திற்கு பணிமாறுதலில் செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு அவர் ஆலய வளாகத்தில் பின்புறம் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆரோக்கியதாசின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய உதவி பங்கு தந்தையின் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஓராண்டாக பணிபுரிந்து இன்று வழியனுப்பு விழா நடைபெறும் நேரத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த உதவி பங்கு தந்தை தற்கொலை செய்து கொண்டது பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தடுப்பு உதவி எண்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல. ஆகவே, சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050-க்கு அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.