சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (மார்ச் 14) சந்தித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விண்ணப்பம் அளித்திருந்தார்.
மேலும், விண்ணப்பத்தை பரிசீலித்து பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், கடந்த மார்ச் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, மதிமுக அளித்த விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, வைகோ இன்று சந்தித்துள்ளார். அப்போது, பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வைகோ விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தின் உத்தரவின் நகலை சத்ய பிரதா சாகுவிடம் வைகோ வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: "திமுகவின் கர்வம் அகற்றப்பட வேண்டும்" - குமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு!