ஈரோடு: மதிமுகவைச் சேர்ந்த, ஈரோடு தொகுதியின் தற்போதைய எம்பி கணேசமூர்த்தி கடந்த மாதம் 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நிலையில் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, பிரச்சாரம் செய்வதற்காக ஈரோட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவி ரேணுகாதேவியுடன் வைகோ ஈரோடு பெரியார் நகர்ப் பகுதியில் உள்ள மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று கணேசமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர், மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் மகன் மற்றும் மகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் எடுபடாது. தமிழகத்தினை 9முறை பிரதமர் நரேந்திர மோடி சுற்றி வந்து விட்டார். வேறு எந்த மாநிலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்று சென்றதில்லை. கொரோனா, வெள்ள பேரிடர் ஆகியவற்றின்போது தமிழகத்தை எட்டிப்பார்க்காத நரேந்திர மோடி, தற்போது எப்படியாவது ஒரு இடத்தையாவது பிடித்திட வேண்டும் என்று தமிழகத்திற்கு 9முறை வந்துள்ளார்" என்று பதிலளித்தார்.
அதன் தொடர்ச்சியாக வெற்றிவாய்ப்பு குறித்துப் பேசிய அவர், "தேர்தல் களத்தை பொறுத்தவைறையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் உயரும் என்ற கருத்துக் கணிப்பு குறித்துக் கேட்க்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்தல் முடிந்த பிறகு, அந்த கருத்துக் கணிப்பு பற்றித் தெரியவரும்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக மத்திய அமைச்சர்கள் வருகை மற்றும் அண்ணாமலையின் இரவு நேரப் பிரச்சாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மத்திய அமைச்சர்கள் வந்தாலும், தமிழகத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இரவு நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்வது குறித்துத் தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் தலைவர்கள்.. இன்று மாலை நெல்லை வரும் பிரதமர் மோடி!