மதுரை: தமிழ் கடவுளாகப் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு வைகாசி விசாகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகும். இந்நாளில் அனைத்து அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் பெருந்திரளாகத் திரண்டு முருகனை வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாகப் பெரும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை ஆக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
இந்த ஆண்டுக்கான விசாகத்திருவிழா, கடந்த 13ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவார்.
வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு காலை முதல் மதியம் 3 மணி வரை,ப க்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்த பாலை குழாய் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கும் முறையை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது.
வைகாசி விசாகத்தில் முருகனைக் காண வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து வருகை தந்த பக்தர்கள், திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்திய பிரியா அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் பொம்ம தேவன் மணி செல்வம் ராமையா கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: மகனின் காதணி விழாவில், காங்கேயம் மாடுகளை பாதுகாக்க கண்காட்சி நடத்திய ஐடி உழியர்!