சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, விருதுநகரில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மீது வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகைச்செல்வன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளாக வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வாதிட்டார்.
பின்னர், காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் K.M.D.முகிலன், வழக்கின் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி, வைகைச்செல்வனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: “அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இயங்கும்”.. அமைச்சர் ரகுபதிக்கு வைகைச்செல்வன் பதில்!