சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், நடிகர் சங்கத்திற்காகக் கடுமையாக உழைத்தார். பிரியாணி போடுவதற்காக ஒரு சில பேர் கூட்டத்தைக் கூட்டுவார்கள். ஆனால், இது தானா சேர்ந்த கூட்டம்.
இவர மாறி வாழவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இவரைப் போல் சாக வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவரது மறைவில் சேர்ந்த கூட்டத்தைப் பார்த்தோம். நடிகர் சங்கத்தில் ஏதாவது ஒரு வளாகத்திற்காவது அவருடைய பெயரை வைக்க வேண்டும்” என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான், “எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள். அதே போல் விஜயகாந்த் அவர்களும் எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்தவர். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்த உடன் 4 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் இறந்துவிட்டோம். அவர் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் ராணுவம் போல் இருந்தது. அதே போல் பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகையும் நடத்தி சந்தோஷமாக இருப்போம்” என பேசினார்.
நடிகர் சரத்குமார், “இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டம், இதில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு மாபெரும் இழப்பு. 90களில் நான் சரிவைச் சந்தித்த போது விஜயகாந்த்திடம் அழைத்துச் சென்றார்கள், அப்போ படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக மீசை எடுக்கச் சொன்னார்கள். அப்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மீசை எடுத்தேன், ஆனால் தற்போது இப்படி ஒரு நிகழ்வில் மீண்டும் மீசையை எடுத்துள்ளேன்.
அவரது இறுதிச்சடங்கின் போது வெளியூரில் இருந்ததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக மிகவும் வருந்தினேன். வடிவேலு வரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தது. யாரையும் எதிர்த்துக் குறை கூறுபவர் இல்லை கேப்டன் விஜயகாந்த். அதனால் வடிவேலு வீட்டிலிருந்து அழுதிருக்கலாம். ஒருவேளை வடிவேலு வந்திருந்தால் திட்டுவார்கள் என்றும் நினைத்திருக்கலாம்” என பேசினார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், “கேப்டனை சந்திக்கத் தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு நடிகர் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார் விஜயகாந்த். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசுவதே அவருடைய ஆசீர்வாதம் கிடைத்த மாதிரி தான். அவரது மகன்கள் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேசுகையில், “கேப்டனுடன் எத்தனையோ நிகழ்ச்சிக்கு போயிருக்கிறேன். இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. மனம் கனமாக இருக்கிறது. பச்சையப்பன் கல்லூரியில் நான் படித்த காலத்தில் இருந்தே எல்லோருக்கும் பிடித்த நடிகர் கேப்டன் தான். கேப்டனுக்கு ஒரு ரசிகனாக அவரது நிறையப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது 50 போன் கால் பண்ணுவார். அதை மிஸ் பண்றேன்” என்றும் கூறினார்.
சண்முக பாண்டியன், “அப்பா, முதல் நாள் ஷூட்டிங் போகும் போது, முதல் ஷாட் முன்னாடியே போக வேண்டும் என்று சொல்லுவார். அதை எப்போதும் பாலோ அப் பண்ணுவேன். வீட்டில் எல்லாருக்கும் அப்பா உணவு கொடுப்பதை நாங்களும் ஃபாலோ பண்றோம். அவர் ஒரு சகாப்தம். அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான். அவர் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார். இந்த நிகழ்ச்சி ரொம்ப ஸ்பெஷல். அப்பாவுக்கு சினிமா தான் எல்லாமே” என கூறினார்.
விஜய பிரபாகரன் பேசுகையில், “சிறிய வயதில் இருந்தே என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததை விட எங்கள் அப்பாவை தான் நிறைய முறை பார்த்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்கப் பேசினார். அப்பா இறந்த பிறகு நான் எந்த இடத்திலும் பேசவில்லை. எங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றத் தான் விஜய பிரபாகரனும் நானும் இருக்கிறோம். கடந்த 10 வருடமாக கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டார். கடைசி வரை அப்பாவிற்கு நினைவு இருந்தது.
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் வீட்டில் வேலை செய்தவர்களிடம் சொல்லி யூடியூபில் எல்லா பாடல்களையும் கேட்டார் (டிசம்பர் 25). பிறகு டிசம்பர் 26இல் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். கேப்டனுக்காக இதைச் செய்ததற்காக நன்றி. யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை, கோபமும் இல்லை. எங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.
நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் நாசர், "உண்மையாகவே விஜயகாந்த் நம்மை விட்டுப் போனதைத் தாங்க முடியவில்லை. நடிகர் சங்கத்தில் அவர் பங்கு மிக முக்கியமானது. என்றென்றும் அவருக்கு நன்றி. ஏறக்குறைய திரையுலகமே அவருக்காக வந்துள்ளது" என கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் விஷால், "விஜயகாந்த் சாருக்காக இதைச் செய்வது எங்கள் கடமை. நடிகர் சங்கம் பொறுத்தவரை , விடாமுயற்சி & உழைப்பு தான். அவரை கௌரவப் படுத்துவதில் எங்கள் கடமை. ஏக மனதுடன் அனைவரின் கருத்தையும் கேட்டுவிட்டு நல்ல முடிவு எடுப்போம். அரசாங்கத்துக்குத் தெரியும் கேப்டனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. அரசு மரியாதை செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது. இன்னும் 10 ஆண்டு கழித்துக் கேட்டாலும் விஜயகாந்த் பெயரைச் சொல்லுவோம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம்” சிங்கப்பூர் சலூன் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலகல!