சென்னை: சென்னை அடையாறு நகர்புற சமுதாய நல மையத்தில் 'குழந்தை நலத்திட்டங்களின்' தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தை நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "2024 - 2025 ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை போது 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நான்கு அறிவிப்புகள் இங்கே செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நான்கு திட்டங்கள்: பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளைக் கண்டறிந்து முழுமையான உடல் பரிசோதனைகளை செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் ஆயிரம் இடங்களில் அதை செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் பிரத்தியேக அடையாள அட்டைகள் ( Child Health Card) என்கின்ற வகையில் அடையாள அட்டைகள் தரும் பணிகள் தொடங்கி உள்ளோம். இது மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தைக் கண்காணிப்பதற்காக சிறப்பு மையங்கள் ஹெல்த் பேபி கிளினிக் ( Health Baby Clinic ) என்கின்ற வகையில் 400 இடங்களில் தமிழ்நாட்டின் இந்த ஹெல்த் பேபி கிளினிக் சிறப்பு மையங்களையும் இங்கிருந்து தொடங்கி வைத்து இருக்கிறோம்.
இதன் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிவது. அதனை ஆரம்பக்கட்டங்களிலே கண்டறியப்பட்டு குறைபாடுகளை தீர்வு காண்பது வளர்ச்சி குறைபாடுகள், செவித்திறன் குறைபாடுகள், பார்வை குறைபாடுகள் போன்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பாக வாழுவும் வளரும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே சுவாசம், இதயத் துடிப்பு போன்றவற்றை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களால் கவனிக்க முடியும்.
இது மட்டுமல்லாமல் 1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பான மற்றும் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் உறுதிப்படுத்துகிற வகையில் இந்திய மருத்துவ முறையுடன் ஒருங்கிணைந்து செவிலியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி தரப்பட்டு யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது!
பெற்றோர் பயன்பாட்டு செயலி: ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான பெற்றோர் பயன்பாட்டு செயலி என்கின்ற ஒரு செயலியை உருவாக்கி அந்த செயலி இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. இதில் சுகாதாரத்துறை செய்திகள், குழந்தைகளுக்கான செய்திகள், கர்ப்பம் மற்றும் பிரசவ காலம் பற்றிய செய்திகள் இப்படி பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு இந்த செயலி உதவியாக இருக்கும் அதையும் இன்று தொடங்கி வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
தடுப்பூசி பற்றாகுறையா? நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டிபிடி தடுப்பு ஊசி பற்றிப் பேசி இருக்கிறார். மொத்தமாக 13 வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்தி வருகிறோம். தடுப்பூசியை பொறுத்தவரை மத்திய அரசுதான் இதை வழங்கி வருகிறது.
தற்போது தடுப்பூசி இருப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என மூன்று முறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது. தடுப்பூசியே இல்லை குழந்தைகள் தடுப்புச் இல்லாமல் அல்லல்படுகிறார்கள் என சொல்லி இருக்கிறார்.
எந்த குழந்தை வந்து இந்த குழந்தை (எடப்பாடி) இடத்தில் சொன்னது எனக்கு தெரியவில்லை. கடந்த ஆட்சியில் டெங்கு குறித்து கவலை கொள்ளாமல் இருந்தது தான் 65 இறப்புக்கு காரணமாக இருந்தது. டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.