திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் களக்காட்டைச் சேர்ந்த மாடசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து 14 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் கடன் பெற்ற நிலையில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என மாடசாமி கேட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்கள் தாமதமானால் வட்டி தொகை உயர்த்தப்படும் என்றும் இரண்டு மாதங்கள் வட்டி செலுத்தவில்லை என்றால் வட்டியை அசலில் சேர்த்து வசூல் செய்யும் முயற்சியில் மாடசாமி ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
தற்போது, அசல் தொகையான 14 லட்சம் ரூபாயை மாடசாமியிடம் அளித்து அடமானம் வைத்த சொத்தை திருப்பி கேட்டால் அவர் ஒரு கோடி ரூபாய் தந்தால் மட்டுமே சொத்தை திரும்ப தர முடியும் எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த கலைராஜன் தனது மனைவியுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக களக்காடு காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 2021 ஆம் ஆண்டு எனது குடும்ப அவசிய செலவுகளுக்காக சுமார் 25 சென்ட் நிலம் அதில் உள்ள வீடு ஆகியவற்றை களக்காட்டைச் சேர்ந்த மாடசாமி அவரது மனைவி தாயம்மாள் மகள் சுபா ஆகியோரிடம் அடமானம் வைத்து 14 லட்சம் ரூபாய் பெற்றேன்.
அதற்கு வட்டியாக மாதம் 70 ஆயிரம் செலுத்தி வந்தேன். ஒரு சில மாதங்கள் தாமதமாக செலுத்தினால் வட்டி தொகையை என்பத்தாயிரமாக வசூலிப்பார்கள். இவ்வாறு வட்டியாக 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து விட்டோம் தற்போது அசல் தொகையை 14 லட்சத்தை செலுத்தி பத்திரத்தை திரும்பக் கேட்டால் அவர்கள் தர மறுக்கிறார்கள்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் மர்மமான முறையில் சடலமாக கிடந்த தாய் மற்றும் மகன்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கடன் தரும் போது அதற்கு பிணையாக சொத்தை அவர்கள் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள என்னை தற்போது மிரட்டி வருகிறார். எனது கணவருக்கும் பக்கவாதம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மாடசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பல தவணைகளாக என்னிடம் அவர் பணம் பெற்றுள்ளார். கந்து வட்டி வசூலிப்பதாக கூறுவது தவறு. இதுகுறித்து காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளோம் நீதிமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்," எனத் தெரிவித்தார்.