திருநெல்வேலி: திருநெல்வேலி டவுண் பகுதியில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்த்தார்.
பின்னர் டவுண் பகுதியில் கடை கடையாக சென்று அமைச்சர் எல்.முருகன் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்தார். தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்,“தமிழகத்தில் நடைபெறும் தொடர் என்கவுண்டரை ஒரு வழக்கறிஞராக என்னாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சட்டம் நீதித்துறை உள்ளிட்டவைகள் இருக்கும்போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளிகள் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனையை பெற்று தரவேண்டும்.
காவல்துறை என்கவுண்டர் மூலம் சட்டத்தை கையில் எடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக கூட்டணி நிலைக்காது என ஏற்கனவே சொல்லியதை போல் திமுக கூட்டணியில் இருந்து அடித்துக் கொண்டு அவர்கள் தானாக வெளியேறுவார்கள்.
திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் பெரிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை. அதனால் இதுதொடர்பாக கேள்விகள் எழக்கூடாது என முதல்வரும், திருமாவளவனும் சேர்ந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் மதுவிலக்கு மாநாடு நாடகம் நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: பேராயரும், அரசியல் தலைவருமான எஸ்றா சற்குணம் காலமானார்
மத்திய அரசின் மூலம் வழங்கப்படக்கூடிய நிதி தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எந்த பாக்கியும் இல்லை என நிதி அமைச்சரே தெரிவித்துவிட்டார். பிரதமரை முதலமைச்சர் சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை” என்றார்.
இதையடுத்து சினிமா படங்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதிகள் குறித்தும், என்கவுண்டருக்கு ஆதரவாக காட்சிகள் இடம் பெறுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அமைச்சரான பின்னர் திரைப்படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். படம் எடுப்பவர்களின் கருத்து சுதந்திரம் அவர்கள் எடுக்கிறார்கள்” என்று எல். முருகன் தெரிவித்தார்.