சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் பாஜக எந்த அளவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது" என கூறினார்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு, "இதன் மூலம் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் குடும்ப அரசியல் செய்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.
இதனைதொடர்ந்து வந்தே பாரத் ரயிலை விளம்பரப்படுத்துவதில் மட்டும் மத்திய அரசு குறிக்கோளாக உள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, "வந்தே பாரத் ரயிலையும் ரயில்வே துறை தான் இயக்குகிறது. ரயில் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்று. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்கு வங்கத்திற்கு நேரடியாக சென்று தேவையான உதவிகளை செய்து வருகிறார்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிரான வழக்கு: ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - MINISTER PONMUDI CASE