கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீ மதி உயிரிழந்த பிறகு ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் மாணவியின் தாய் மாமனை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2022ம் ஆண்டில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இது குறித்து விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி ஶ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகன் (47) என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று(புதன்கிழமை) கைது செய்தனர்.
சென்னையில் இருந்த அவரை கைது செய்து சிறப்புப் புலனாய்வு குழுவினர் கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச்சென்றனர். மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு நேரிலும் தபால், மூலமும் பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில் முருகன் ஆஜராகாததால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கலவர வழக்கில் செந்தில் முருகன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 15 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவி மரண கலவர வழக்கில் அவரது தாய் மாமா கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.