திண்டுக்கல்: முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழா நேற்று நத்தத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் துணை முதல்வராக பொறுப்பேற்று, முதல் திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை. இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதலாக வந்தது திண்டுக்கல் மாவட்டம் தான். நேற்று இரவு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கட்சியினர் என்னை வரவேற்றன. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, படிக்கக் கூடாது என்ற நிலை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தது திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும். அவரின் லட்சியங்களுக்கு அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் செயல்வடிவம் கொடுத்தார்கள்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர் அண்ணன் ஆண்டி அம்பலம் அவர்களுடைய அன்பு மகன் தம்பி ஆண்டிச்சாமி - ராதாதேவி இணையரின் திருமணத்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள விளாம்பட்டியில் இன்று நடத்தி வைத்தோம்.
— Udhay (@Udhaystalin) October 21, 2024
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற… pic.twitter.com/02IATY6P0G
பெண்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்த நம் அரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மட்டுமல்ல, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற வைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி.
கருணாநிதியின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன்: நான் சொல்லாததை சொன்னதாக பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறேன்.
இந்தி திணிக்க முயற்சி: புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை என்பதால், தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்குகிறேன் என்று நினைத்து மண்ணை கவ்வியுள்ளார்கள். ஏற்கெனவே, அண்ணா சூட்டிய தமிழ்நாடு எனும் பெயரை மாற்றப்போகிறேன் என்று ஒருவர் நினைத்தார். இதற்கு சிலபேர் துணை போக முயன்றனர். தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில் மன்னிப்பு கேட்டார்.
திமுக-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது. தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருநாளும் ஏற்காது. மணமக்களுக்கு ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழக ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.