சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (நவ.12) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "அடுத்த 4 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 5.5 செ.மீ அதிகபட்சமாகப் பெருங்குடியில் 7.35 செ.மீ மழையும், செங்கல்பட்டில் 1.0 செ.மீ மழையும், திருவள்ளூரில் 0.6 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தோம். 1494 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 158 அதி விரைவு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும், அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவியுள்ளோம். 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் 95 ஆக இருந்தது தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம்.
இதையும் படிங்க: சென்னையை இருட்டாக்கிய மழை மேகங்கள்; வாகன ஓட்டிகள் அவதி!
கணேசபுர சுரங்கப்பாதையை தவிர மற்ற 21 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்க பாதையில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சுரங்க பாதை மூடி வைக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிராதான 3 கால்வாய்களில் வேலை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் நிறைவு பெறும். திருச்சி, மதுரை, தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இப்போதைக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் பெரிய புகார் ஏதுவும் வரவில்லை, ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் புகார் அளிக்கிறார். அதுவும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியளவில் தொலைப்பேசி வாயிலாக புகார் வரவில்லை. தற்போது, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 22 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர்" என்றார். பின்னர், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை எனக் கூறியதற்கு, "நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என சொல்லுங்கள் நான் வந்து பார்க்க வைக்கிறேன்" எனத் தெரிவித்தார். பட்டினம்பாக்கம் பகுதியில் நேற்று இரவிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "இன்னும் சற்று நேரத்தில் சரி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்