வேலூர்: வேலூர் காகிதப் பட்டறையில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயது முதல் 21 வயது உடையோர் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 30 பேர் உள்ள நிலையில், இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வழக்கம்போல, இன்று மாலை வேளையில் இளம் சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் சிறார் மற்றும் கோவையைச் சேர்ந்த 18 வயது இளம் சிறார் ஆகிய இருவரும் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசினர் பாதுகாப்பு இடத்தின் கண்காணிப்பாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு இடத்தில் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தப்பியோடிய இரு இளம் சிறார்களை பிடிக்க வேலூர் புதிய பேருந்து நிலையம், வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், இதே அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 பேர் தப்பியோடி மீண்டும் பிடித்து பாதுகாப்பு இடத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேக்கரி ஓனரை கத்தியால் தாக்கிய இளைஞர்.. திருப்பூரில் பரபரப்பு! - Youth Attacking A Bakery Owner