சென்னை: சென்னை ராயபுரம் ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (24). இவர் கடந்ந ஜூலை 7ஆம் தேதி வேலையை முடித்து விட்டு தனது பஜாஜ் பல்சர் 220 இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்றுள்ளார். பின்னர், வழக்கம்போல் காலை எழுந்து வந்து பார்த்த போது, அவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. மேலும், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் காதர் மீரான் தலைமையில் தனிப்படை அமைத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை துளசிங்கம் தெருவைச் சேர்ந்த டெல்லி என்ற டில்லி பாபு இருசக்கர வாகனத்தை திருடியது என தெரியவந்தது. அதன் பின்னர் அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், மெரினா கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்த டில்லி பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் மீது திருவொற்றியூர், காசிமேடு, பூக்கடை, ஜெ.ஜெ.நகர், முத்தியால்பேட்டை, அண்ணா சதுக்கம் கடற்கரை காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சிறையில் இருந்து வெளியாகி 4 நாட்களில் மீண்டும் இருசக்கர வாகனம் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, டில்லி பாபு கொடுத்த கொடுத்த தகவலின் பேரில், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த முகேஷ் என்ற பேய் முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிசிடிவியால் சிக்கிய 25வது செயின் பறிப்பை அரங்கேற்றிய நபர்!