கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மனைவி வசந்தம்மா(37) மற்றும் அதே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி அஸ்வத்ம்மா ஆகிய இருவர் பரிதாபமாக இன்று (பிப்.18) உயிரிழந்தனர். மேலும் அன்னியாலம் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு ஆளாகிய இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன.
ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானையின் தாக்குதலினால், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்து கொண்ட தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனும் கிராம மக்களுக்கு இதுவரை ஒரு அதிகாரிகள் கூட சம்பவ இடத்திற்கு வந்து, ஆறுதல் தெரிவிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டினார். இது போன்ற தொடர் சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி சுமார் நான்கு மணி நேரமாக அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தருமபுரி மாவட்ட வன அலுவலர் பொறுப்பு அப்பல நாயுடு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கூறுகையில், "நான் சட்டமன்றத்தில் தளி பகுதியில் வனவிலங்குகளால் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். மின்வேலி அமைக்கும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்” எனக் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!