சென்னை: திருவல்லிக்கேணி போக்குவரத்து காவலர்கள் இருவர் தங்கள் எல்லையைத் தவிர்த்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதால், இருவரை போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்குவரத்து காவலர்களான, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் தலைமைக் காவலர் கென்னடி ஆகிய இரண்டு பேரும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக காரில் வந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவி போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி, பணியிலிருந்த இந்த இரண்டு காவலர்களும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், காவலர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்குமிடையே அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவ்விரு காவலர்களும் தங்கள் எல்லை அல்லாத, ஆயிரம் விளக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால், போக்குவரத்து இனை ஆணையர் மகேஷ் குமார் இரு காவலர்களையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இளைஞரைக் காலால் எட்டி உதைத்து, அடித்த போக்குவரத்து காவலர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனித சக்தியின் மறுஉருவாக்கமா AI! செயற்கை நுண்ணறிவால் எதிர்வரும் சாதக.. பாதகங்கள்.. என்ன? நிபுணர் கூறுவது என்ன?