கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கரிய மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (48). இவர் பெயிண்டராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ் (21). இவர் ஐடிஐ (ITI) படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆகாஷ் மற்றும் இடலாக்குடி அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சஜித்(24), சபையார் குளத்தைச் சேர்ந்த மதன் ஆகியோர் நண்பர்கள். இந்நிலையில், ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் வழக்கம் போலச் சபையார் குளம் பகுதியில் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் மதன் உட்பட மேலும் சிலர் அங்கு வந்துள்ளனர். ராகுலுக்கும், மதனுக்கும் இடையே அடிக்கடி சிறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும், அதனை ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் சேர்ந்து சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராகுலுக்கும், மதனுக்கும் இடையே மீண்டும் திடீரெனத் தகராறு ஏற்பட்டதாகவும், அதனை ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் சேர்ந்து சமாதானம் செய்து வைத்து, அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் தகராறு அதிகரித்துக் கொண்டே சென்றதால், அங்கு மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக மதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் அந்தக் கும்பலைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆகாஷை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியதுடன், சமரசம் செய்ய நீ என்ன பெரிய ஆளா? என்று கேட்டு, தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆகாஷை குத்தியதாகவும், இதைத்தடுக்க முயன்ற சஜித்துக்கும் கத்திக் குத்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்த சிலர் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஆகாஷை தனியார் மருத்துவமனைக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ஆகாஷை பரிசோதித்த போது ஆகாஷ் உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும், சஜித் படுகாயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக, ஆகாஷ் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகாஷின் தந்தை ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில், பறக்கை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பைசல் என்ற ஷேக் செய்யது அலி (28), கரிய மாணிக்கபுரம் ஆழ்வார் கோயில் தெருவைச் சேர்ந்த தில்லை நம்பி(25), சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த சனோஜ் என்ற பிளாக்கி ராகுல்(22), ஆஷிப், அஜின் உள்ளிட்ட 6 நபர்கள் மீது கொலை முயற்சி, கொலை செய்தது உட்பட எட்டுப் பிரிவுகளின் கீழ் கேட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள சஜித் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தில்லை நம்பி, பைசல் ஆகியோர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மற்றவர்களை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்து இருப்பது நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சேலம் - சென்னை இடையேயான இண்டிகோ விமான சேவை நேரத்தில் மாற்றம்! - Salem To Chennai Flight Service