வேலூர்: வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா (36). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த 7 நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பெண்கள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 4) மாலை நேரத்தில் சுபாவைக் காண உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த முதுகலை பயிலும் மருத்துவர் விஷால், சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்து, இது பெண்களுக்கான வார்டு எனவும், உடனடியாக வெளியேறும்படியும் தெரிவித்துள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனைக் கண்ட சுபா, இருவரையும் தடுக்க முயன்றபோது, மருத்துவர் சுபாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வேலூர் தாலுகா போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், மருத்துவரைத் தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், 2008 மருத்துவரைத் தாக்கும் சட்டம், பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், மருத்துவரைத் தாக்கிய பெண் சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பிடிஆர் அளித்த விளக்கம்!