மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணைச் செயலாளராக உள்ளவர் அகமது ஷாவலியுல்லாஹ். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னை மற்றும் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்ட திமுகவில் அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணைச் செயலாளர் பொறுப்பை பெற்றார். மேலும், குறுகிய காலத்தில் திமுகவினரிடையே கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றார். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் அகமது ஷாவலியுல்லாஹ்வுக்கு தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் இதுவரை 3 முறை மிரட்டல் வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. கடைசியாக ஜூலை 14ஆம் தேதி வந்த வாய்ஸ் மெசெஜில், மயிலாடுதுறையில் உள்ள அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகத்தில் ஜூலை 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாகவும், அதற்கு பிறகும் ஏரியாவில் அரசியல் செய்ய வந்தால் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும் என ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அந்த மெசேஜில் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அகமது ஷாவலியுல்லாஹ் தரப்பினர், மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாராணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த வாட்ஸ் ஆப் நம்பரை போலீசார் trace out செய்தனர்.
அதன்படி, சென்னையில் தனியார் வங்கி விற்பனை பிரிவு கால் சென்டரில் வேலை பார்த்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் சாய் பிரவீன் ஆகிய இருவரையும் தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் பணம் கொடுத்து வாய்ஸ் மெசெஜை அனுப்ப சொன்னதன் பேரில், வாட்ஸ் அப் மெசெஜ் அனுப்பியது தெரிய வந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள மணிபாரதியை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாகவும், அவர்கள் பிடிபட்ட பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “தலைமைக்கு தெரிந்தால் அவ்வளவுதான்..” கள்ளக்குறிச்சி எம்பி போலீசாரிடம் கூறியது என்ன? - MP Malaiyarasan video