ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் போதைப் பழக்கம் இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும், போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க என்ற முனைப்புடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் அரசுத் தரப்பில் நடத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பலை பிடிக்க போலீசார் தரப்பில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சாவால் சீரழியும் குடும்பத்தைக் காப்பாற்றவும், மாணவர்களை போதைக்கு அடிமையாவதில் இருந்து மீட்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், நண்பர்களுடன் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மாக்கினாங்கோம்பை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (24), சத்தி அருகே உள்ள அரியப்பம்பாளையம் தோடமுத்தூரை கவியரசன் (25) ஆகிய இருவரும் கல்லூரி மாணவரை வழிமறித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, விற்பனைக்காக கஞ்சா இருப்பதாகக் கூறிய இருவரும், கல்லூரி மாணவரிடம் இருந்த 400 ரூபாயை சட்டை பாக்கெட்டில் இருந்து இருந்து எடுத்துக் கொண்டு, 125 கிராம் கஞ்சாவை கொடுத்துவிட்டு பைக்கில் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர், இச்சம்பவம் குறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கடத்தூர் போலீசார், கல்லூரி மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த கவியரசன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், கவியரசன் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவருக்கும் கஞ்சா சப்ளை செய்யும் கும்பலையும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.