பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பசும்பலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (59).
இவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அரசுப் பள்ளிகளில் பணியில் இருப்பவர்கள் இதுபோல ஓய்வு பெறும் போது அந்த கல்வியாண்டினை நிறைவு செய்யும் பொருட்டு, பணி நீட்டிப்பு பெறுவது வழக்கமான நடைமுறையாகும்.
அந்த வகையில், பாலசுப்பிரமணியன் வருகின்ற ஏப்ரல் மாதம் வரையில் தனக்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் அணுகியுள்ளார். அப்போது பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு ரூ.40,000 லஞ்சமாக தர வேண்டுமென அலுவலக இளநிலை உதவியாளர் சிவபாலன் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியன், இது குறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனை படி இன்று லஞ்ச பணத்தை கொடுக்க மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு பாலசுப்பிரமணியன் வந்துள்ளார்.
இங்கிருந்து சிவபாலன், அலுவலக உதவியாளர் ரமேஷ் என்பவரை அனுப்பி பாலசுப்பிரமணியத்திடம் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை வாங்கும்படி தெரிவித்துள்ளார். சிவபாலன் கூறியது போல பாலசுப்ரமணியத்திடம் இருந்து லஞ்ச பணத்தினை ரமேஷ் வாங்கும்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் ரமேஷ் மற்றும் சிவபாலனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : சாலை போட்ட ஒப்பந்தக்காரரிடம் லஞ்சம் பெற்ற பி.டி.ஓ. கைது! சிக்கியது எப்படி? - bribe issue