கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நலன் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், "நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் தாலுக்கா செய்தியாளர் நேசபிரபு நேற்று இரவு மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலன் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக ஆறுதலான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மன வருத்தம் அடைந்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவின்படி செய்தியாளர் நல வாரியத்தின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலை நேரடியாக வழங்கப்படுகிறது.
தாக்கப்பட்ட செய்தியாளருக்கான முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், முதல்கட்டமாக நல வாரியம் மூலம் 3 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேசபிரபுவின் தாய் தந்தையரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிகாரிகள் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?