கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு முட்டைக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வியாபாரத்திற்காக முட்டை வாகனத்தில் காரமடைக்குச் சென்றுவிட்டு, கண்ணார்பளையம் சந்திப்புப் பகுதியில் உள்ள கடையில் முட்டையை இறக்கி வைத்து விட்டு மீண்டும் வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்து முருகன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இரண்டு பேர் மீது பேருந்து மோதியதில் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், முட்டை வியாபாரி மீது தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மேட்டுப்பாளையம், கோவை சாலையில் அண்மைக் காலமாக தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால் அதிகளவு விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் காரமடை மேற்கு பகுதியில் உள்ள ஆதிமாதனுர் கிராமத்தில், அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார். இந்த இருவேறு விபத்துக்கள் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறல்? பொதுமக்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள்? - Women Harassed CCTV