சென்னை: பிரபல ரவுடிகளான எலி யுவராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், 28 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டது என முதலில் கூறப்பட்டாலும், பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணை படி காவல்துறையினரின் குற்றப்பத்திரிகையில், A1 ஆக ரவுடி நாகேந்திரனும், A2 ஆக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்திலை பிடிக்க காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளிகளான எலி யுவராஜ் மற்றும் ஈஷா என்கிற ஈஸ்வரன் ஆகியோர் கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பு கேட்டு மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் ஆசிரியை கொலை, ஓசூர் கொலை முயற்சி சம்பவங்கள் தனிப்பட்ட விவகாரம் - ஆர்.எஸ். பாரதி
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், '' இனிமேல் திருந்தி வாழ்வதற்காக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். தங்களுக்கு வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எங்கள் மீதுள்ள கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. ஒடிக்கொண்டே இருக்க முடியவில்லை. குடும்பத்தினருக்காக ஒழுங்காக இருக்க நினைக்கிறோம். சம்போ செந்திலுடன் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு எவ்வித தொடர்பும் எங்களுக்கு இல்லை என்றும் அவரை அதன்பிறகு நேரில் கூட பார்த்தது இல்லை என இவ்வாறு கூறினர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரித்தார்களா என்ற கேள்விக்கு, வேறு ஒரு வழக்கு விசாரணையின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்தார்கள்.. பிறகு அதற்கும் எங்களும் தொடர்பு இல்லை விட்டுவிட்டார்கள் என்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்