கோயம்புத்தூர்: கோவை அடுத்த புலியகுளம் பகுதியில் கடந்த வாரம் 8 அடி நீள சாரைப்பாம்பு குடியிருப்பு பகுதியில் புகுந்ததாக தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த உமா ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் அங்கு வந்த அவர்கள் இருவரும் பாம்பை பிடித்துள்ளனர்.
பின்னர், அதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்ததும், வனப்பகுதியில் அந்த பாம்பு பத்திரமாக விடப்பட்டது. முன்னதாக, அந்த பாம்பை பிடித்து அதனை கையில் வைத்தபடியே, சாரைப்பாம்புகள் விஷமற்றவை எனக் கூறி, அவற்றால் எந்த விதமான ஆபத்தும் இல்லை எனக் கூறி உமா வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலானதை அடுத்து, பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி பாம்பை பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக கோவை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் 20,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "பாம்பை பிடிக்கும் போது ஆபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை இன்றி பாம்பை பிடிக்க முயற்சி செய்யக்கூடாது. இவர்கள் பாம்பைக் காப்பாற்றிய நல்லெண்ணத்தின் அடிப்படையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயத்தில் புலிகள் கனக்கெடுப்பு பணி துவக்கம்!