தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தனது எக்ஸ் தளத்தில் தருமபுரி ரயில் நிலையம் வழியாக மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதுரை – பெங்களூரு, எர்ணாகுளம்,- பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் தருமபுரி வழியாக இயக்க வேண்டும் என தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ரயில்வே துறைக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில்,அதன் எதிரொலியாக மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மதுரை-தருமபுரி-பெங்களூரு மற்றும் எர்ணாகுளம்-தருமபுரி-பெங்களூரு என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே ஒரு ரயில் இயக்கத்தில் உள்ள நிலையில், இதனோடு சேர்ந்து தருமபுரி வழியாக 3 வந்தே பாரத் ரயில்கள் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால் தருமபுரியில் இருந்து மதுரைக்கு விரைவாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தருமபுரியில் இருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை மாறி வந்தே பாரத் இயக்கப்பட்டால் பகலிலேயே தருமபுரியில் இருந்து மதுரை செல்ல முடியும் என ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தருமபுரியின் தற்போதைய எம்.பியாக இருக்கும் செந்தில்குமார், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.