தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளராக அகமது என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த மே 5ஆம் தேதி பணிநிறைவு வழங்கப்பட இருந்தது. அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, கலுங்குவிளை கூட்டுறவு வங்கியில் 50 லட்சத்துக்கு மேல் பணம் கையாடல் நடந்துள்ளதாகக் கூறி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு இரண்டு நாட்கள் நடந்த சோதனையில், வங்கி செயலாளர் அகமது பணம் கையாடலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், பணம் கையாடலில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, 14 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அன்றைய தினமே வங்கி செயலாளர் அகமதுவை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலர் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று கலுங்குவிளை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அகமதுவுடன் சேர்ந்து பணம் கையாடலில் ஈடுபட்டதாகக் கூறி கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் உர விற்பனையாளர் அமுதா ஆகிய இருவரையும் கூட்டுறவுத் துறையினர் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நடவடிக்கையை அறிந்து கூட்டுறவு வங்கி முன்பு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் செய்த சம்பவத்தில் ஏற்கனவே வங்கி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபோதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா! - Jayankondam Registrar Issue