சென்னை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). இவர் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவருடன் பெண் ஒருவர் செல்போன் மூலமாக பழகி வந்துள்ளார். அந்த பெண் கடந்த மே 17ஆம் தேதி இரவு, தனது வீட்டில் பார்ட்டி நடப்பதாக பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெருவுக்கு ஜாவித் சைபுதீனை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அந்த இடத்துக்குச் சென்ற ஜாவித் சைபுதீனை, திடீரென அங்கு தயாராக இருந்த ஒரு கும்பல் காரில் கடத்தி மதுரவாயலுக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, உன்னை கொலை செய்ய 30 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக ஒருவர் கூறியுள்ளதாகவும், நீ எங்களிடம் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் மட்டுமே உன்னை உயிரோடு விடுவோம் எனவும், இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அச்சம் அடைந்த ஜாவித், தனது குடும்பத்தினரிடம் பேசி ரூ.50 லட்சம் பணம் வாங்கி கடத்தல்காரர்களுக்கு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் பிறகு, மே 18ஆம் தேதி மாலை சேத்துப்பட்டு பகுதியில் தன்னை கடத்தல் கும்பல் இறக்கிவிட்டுச் சென்றதாக போலீசாரிடம் ஜாவித் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஜாவித் அளித்த புகாரின் பெயரில், சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
மேலும், பட்டினப்பாக்கத்துக்கு ஜாவித்தை வர வைத்த பெண் யார் என்று காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஜாவித் சைபுதினை மது விருந்துக்கு அழைத்து காரில் கடத்திச் சென்று 50 லட்சம் பணம் பறித்த சம்பவத்தில் வேலூரைச் சேர்ந்த சோனியாவை போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடத்தலில் தொடர்புடைய இளையான்குடியைச் சேர்ந்த தமிம் அன்சாரியை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, அம்பத்தூரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் சக்திவேல் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவ்வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், மேலும் இதில் தொடர்புடைய கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அப்பன் ராஜ் மற்றும் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகிய இருவரை பட்டினம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உதவி செய்வது போல் நாடகமாடி சிறுமியை கடத்திய இளைஞர் - போலீசில் சிக்கியது எப்படி?