தென்காசி: புளியங்குடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள தென்காசி - மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை கேரள மாநிலத்திற்கு பனையூரில் இருந்து எம்சென்ட் ஏற்றிச்சென்ற லாரியும், தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற மினி டிப்பர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில், டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துக்குமார்(31) மற்றும் அவருடன் வந்த கணேஷ்குமார்(43) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அதிகாலையில் நேர்ந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலையில் இரண்டு லாரிகளும் அப்பளம் போல நொறுங்கின.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ஜேசிபி உதவிடன் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் சதீஷை(31) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.