மதுரை: மதுரையில் பெய்த கனமழை மற்றும் அதிக காற்றழுத்தத்தின் காரணமாக சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து வந்த இண்டிகோ பயணிகள் விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்ததால் மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழை, நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மேலும் செல்லூர் கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீர் பந்தல்குடி கால்வாயில் பெருகியதால், செல்லூர் பகுதியிலுள்ள பல்வேறு தெருக்கள் தண்ணீரில் மிதந்தன. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததது.
இந்த நிலையில், இன்று இரவு 8 மணியளவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை விமான நிலையம் அமைந்துள்ள அவனியாபுரம், பெருங்குடி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெங்களூருவிலிருந்தும், சென்னையிலிருந்தும் மதுரைக்குப் புறப்பட்டு வந்த இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன.
சென்னையிலிருந்து இரவு 7:20 மணிக்குப் புறப்பட்ட மதுரை விமானம், 8:20க்கு மதுரையில் தரையிறங்க வேண்டும். அதேபோன்று பெங்களூருவிலிருந்து இரவு 7:40 மணிக்குப் புறப்பட்ட விமானம், மதுரையில் இரவு 8:35க்கு தரையிறங்க வேண்டும். ஆனால் பலத்த மழை மற்றும் காற்றழுத்தம் காரணமாக விமானஙஅகள் தரையிறங்க முடியாமல் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வான் பகுதியில் வட்டமடிக்கத் தொடங்கின.
தகவலறிந்த விமான கட்டுப்பாட்டு மைய (ஏடிசி) அதிகாரிகள், தொடர்ந்து இவ்விரு விமானங்களின் நிலை குறித்து தகவல் கேட்டறிந்ததுடன், தகுந்த வழிகாட்டுதல்களை அந்தந்த விமானங்களின் விமானிகளுக்கு அளித்து வந்தனர். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரவு சுமார் 9: 50 மணியளவில் விமான நிலையப் பகுதியில் வானிலை சீரடைந்ததும், 2 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.