மதுரை: மதுரையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்வு நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால், மதுரை வைகை ஆறு மக்கள் வெள்ளம் நிறைந்து கடல் போல் காட்சியளித்தது.
இந்த நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். அப்போது, இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், உயரமான பட்டா கத்தியை எடுத்து, எதிரில் நின்ற இளைஞர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.
அப்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பக்தர்கள் கூட்டத்திற்கிடையே தப்பித்து ஓடியுள்ளனர். இச்சம்பவம் கள்ளழகரைத் தரிசிக்க வந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பட்டா கத்தியோடு சித்திரைத் திருவிழாவிற்கு வந்து, இன்னொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களைத் தாக்க முற்பட்ட சம்பவம் திருவிழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இதுதொடர்பாக பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், யார் அந்த இளைஞர்கள், எதற்காக மோதிக் கொண்டனர், பட்டா கத்தியை எடுத்து வந்தது ஏன் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.