சென்னை: வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இரண்டு போலி மருத்துவர்கள் இருப்பதாக வந்த புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தனியார் மருத்துவமனை உரிமையாளர் சரவணனிடம் விசாரணை மேற்கொண்ட போது அகஸ்டின், பரதன் ஆகிய இருவர் போலி சான்றிதழ் மூலம் மருத்துவம் பார்த்து வந்ததும், அவர்களது மருத்துவ சான்றிதழ்களை சோதனை செய்த போது போலி மருத்துவ சான்றிதழ்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார் அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அகஸ்டின் கடந்த 2003ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயின்றதாகவும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும், போலி சான்று மூலம் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளாக பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மற்றொருவரான பரதன் என்பவரிடம் விசாரித்த போது, அவர் சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளதாகவும், 2014ஆம் ஆண்டு வரை சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ ஆணையத்தில் அனுமதி பெற்று இருந்ததாகவும், அதன்பின் அதனை புதுப்பிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
போலி மருத்துவர்கள் குறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், போலி மருத்துவர்கள் என தெரியாது என்று பதில் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகே மருத்துவமனை மற்றும் அதன் உரிமையாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரியவரும். குறிப்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தவறு செய்திருந்தால், மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலி மருத்துவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காளிகாம்பாள் அர்ச்சகர் கார்த்திக் மீது புதிய புகார்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி - Temple priest sexual case