கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொடர்ந்து இரவு நேரங்களில் உலா வருகின்றன. மேலும், இந்த காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பெரிய தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் அதன் குட்டி யானை தடாகம் அருகே உள்ள தண்ணீர் பந்தல், செளடாம்பிகா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வந்த நிலையில், வீடுகளில் உள்ள கொய்யா, சப்போட்டா பழங்களைச் சாப்பிட்டுள்ளன.
இதற்கிடையே அந்த பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடிசைக்குள் யானைகள் நுழைய முயன்றதால், குடிசை சேதமடைந்துள்ளது. இதைக் கண்டு குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வடமாநிலத்தவரும் பின்புறம் வழியாக தப்பிச் சென்றதால் நூழிலையில் உயிர் தப்பினர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயி அய்யசாமி கூறுகையில், “தடாகம், வீரபாண்டி, மருதமலை பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு யானைகளும் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் வீடுகளை சேதப்படுத்துவதோடு, வீட்டிற்குள் இருக்கும் அரிசி, தவிடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை தேடி, வீட்டில் உள்ளவர்களை அச்சமடையச் செய்கிறது.
இந்த யானைகள் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீட்டை மட்டுமே குறிவைத்து இரவு நேரங்களில் வருகின்றன. இதனால் இரவு முழுவதும் தூங்காமல் யானை குறித்த அச்சத்தில் இருக்க வேண்டியுள்ளது. எனவே, யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புரட்டிப்போடும் கனமழை; நீலகிரி விரைந்த பேரிடர் மீட்புப்படை... கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!