வேலூர்: ஏரியில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன், பிறந்தநாள் காணும் தம்பி ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் - செம்பருத்தி தம்பதி. இவர்களுக்கு ராஜா (10), ஸ்ரீசாந்த் (7) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கிராமத்தின் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தனர்.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) ஸ்ரீசாந்துக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து, விடுமுறை என்பதால் வழக்கம் போல் இருவரும் அருகில் உள்ள ஏரந்தாங்கல் ஏரியில் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளனர்.
அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நிலையில், அவர்கள் அடித்த பந்து ஏரியில் அதிக ஆழம் தோண்டப்பட்டுள்ள பகுதியில் விழுந்துள்ளது. ஏரியில் ஆழம் இருப்பதை அறியாமல் பந்தினை தேடுவதற்காகச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் விளையாடச் சென்ற மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
அப்பொழுது, அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சார்ந்த முரளி என்பவர் ஏரியில் குதித்து சிறுவர்களை தேடியுள்ளார். ஆனால், சிறுவர்கள் கிடைக்காததால் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஏரியில் சிறுவர்களை தேடிய நிலையில், அண்ணன் ராஜா மற்றும் தம்பி ஸ்ரீசாந்த் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து திருவலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் இருவர் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டை காலி செய்வதாக கூறியதால் மின்சாரம், தண்ணீர் கட்.. பெண் வெளியிட்ட வீடியோ!